தனுசு ராசி அன்பர்களே!!.குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

நல்லது நடக்காதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று என்றே சொல்லலாம். கடந்த மூன்றரை வருடமாக பார்க்காத நெருக்கடி இல்லை,   படாத போராட்டமில்லை, அடையாத சித்ரவதையில்லை என்றே சொல்லலாம். ஏழரை நாட்டுச் சனியில் எதிர்நீச்சல் போட்டவர்களில் முக்கிய ராசி தனுசு ராசி. 

இதுவரை உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். ஏழரைச் சனியின் கடுமையான பாதிப்புகள்   குறையும். குழப்பமான நிலையிலிருந்து தெளிந்து, நிலையாக நின்று வெற்றிக்கொடியை நிலைநாட்டப் போகிறார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன்   செயல்படுவீர்கள்.

கடந்த காலங்களில் இருந்துவந்த மிகப்பெரிய மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். தடைகள் விலகும். சனியும் கேதும் பல நெருக்கடிகளையும், கஷ்டங்களையும், உடல்   நலத்தில் மிகப்பெரிய பயத்தையும் ஏற்படுத்திவந்தது. அப்படிப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு விடிவுகாலமாகவும், மீண்டுவரும் குருப்பெயர்ச்சியாகவும் இது   அமையப்போகிறது. 

குடும்பத்தில் இருந்துவந்த பல்வேறு நெருக்கடிகள் நீங்கும். உங்கள் வார்த்தை மதிப்பு அதிகரிக்கும். பொருளாதார விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

புது உத்வேகம் பிறக்கும். தைரியம் ஏற்படும். தெளிவாக எதையும் யோசித்து செயல்படுத்துவீர்கள். வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் முறையில்   நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்தவிதமான முயற்சிகள் செய்தாலும் அது வெற்றிபெறும். வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். 

கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். புத்தி சாதூர்யத்துடன் நடந்துகொண்டு சேமிப்புகள் உயர்த்திக்கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கு இரண்டு மடங்கு பலன்   கிடைக்கும். சிலருக்கு அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகள்  தானாகவே  உங்களைத் தேடிவரும். இல்லத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நிறைவேறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சி காலங்களில் சுணக்கத்திற்கும், சோம்பேறித் தனத்திற்கும் இடம் தராது பணியாற்றினால் மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியிலிருந்து தப்பிக்கலாம். உங்கள்   பேச்சில் நிதானம் இருக்கப் பழகிக்கொண்டு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். மற்றபடி உழைப்பிற்கு இரட்டிப்பாக வருமானத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய   வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு..

உங்களைத் தேடி வரவேண்டிய பணம் வந்துசேரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி   எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை நோக்கி வருவார்கள். திட்டமிட்ட வேலைகளை உடனே செய்து முடிக்கவும். கூட்டாளிகளின் ஆலோசனைகயின் பேரில்   புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

விவசாயிகளுக்கு..

விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபங்களும் சிறப்பாக அமையும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள்.   கடன்களுக்கு அரசு மானியங்களும் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவார்கள். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். புதிய தொண்டர்களைக் கட்சியில்  சேர்ப்பீர்கள்.  எதிரிகளின் நடவடிக்கைகளுக்குச் சாதுரியமாகச் செயல்பட்டு பதிலடி கொடுத்து அதிலிருந்து விடுபடுவீர்கள். 

கலைத்துறையினருக்கு.. 

வரவுக்கேற்ற புகழும், கௌரவமும் உண்டாகும். பண வரவில் படிப்படியான உயர்வினைக் காண்பீர்கள். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப்   பெறுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும். 

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியால் குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளால், மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானமும் சீராகவே தொடரும். அதேநேரம் மனதில் காரணமில்லாத   குழப்பங்கள் நிலவும். மனதை ஆன்மீகத்திலும், இறைவழிபாட்டிலும் செலுத்துங்கள். கணவரின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். 

மாணவமணிகளுக்கு..

உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு வருவதன் மூலம் நன்மை உண்டாகும்.