மூலிகை அறிவோம் அரிவாள்மனைப் பூண்டு மருத்துவ பயன்பாடுகள் என்ன ?

1. மூலிகையின் பெயர் -: அரிவாள்மனைப் பூண்டு.

2. தாவரப் பெயர் -: SIDA CAPRINIFOLOLIA.

3. தாவரக்குடும்பம் -: MALVACEAE.

4. வேறு பெயர்– : BALA PHANIJIVIKA.

5. பயன்தரும் பாகங்கள் –: இலை, விதை, வேர் முதலியன.

6. வளரியல்பு -: அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் –: இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’

அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.